பாகிஸ் தானில் இருந்து, இந்தியாவுக்குள் 100-ல் இருந்து 120 பேர் வரை கொண்ட ஒரு கூட்டத்தினர் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதி வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.
இவர்களில் 31 பேர் தீவிரவாதிகள். மற்றவர்கள், அவர்களுக்கு வேண்டிய வெடிபொருள், ஆயுதங்கள், உணவுப்பொருள் போன்றவற்றை சுமந்து செல்லும் போர்ட்டர்கள் மற்றும் வழிகாட்டிகள். இந்த தகவலை, இந்திய ராணுவ பிரிகேடியர் குர்மீத் சிங் ஸ்ரீநகரில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்திய பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் 18 நாள் முதல் 90 நாள் வரை பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள்.
குரேஸ் பகுதியில் இப்போது அதிக அளவில் பனிக்கட்டிகள் உருவாகி உள்ளன. எனவே, எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு விட்டன.இதை பயன்படுத்தி, தீவிரவாதிகள் அந்த வழியாக இந்தியாவுக்குள் வந்து விட்டனர்” என்றார்.