ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில் கூறியதாவது;
யுத்த முன்னெடுப்பின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் நிவாரண உதவிகளை அரசாங்கம் உரிய முறையில் வழங்க வேண்டும், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாம் திடமாகவுள்ளோம். அதேவேளை நீண்டகாலமாக சமாதானமொன்றை அரசு ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான அரசியல் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இனியும் யுத்தத்தை இந்த அரசு விற்பனை செய்ய முடியாது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஊடகம் ஆற்றும் பங்கு அளப்பரியது. முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கவென ஐ.தே.கட்சி நிவாரணப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.