பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும் விழாக்களுக்காக 30 வீத கேளிக்கை வரி – ஜே.வி.பியின் பொருளாதார அறிக்கை உண்மையா..?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கையின் வரைபென குறிப்பிடும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, பொருளாதார நிர்வாக சபை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு ஆகியன இணைந்து கடந்த 06 மாதங்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த இறுதி வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், 3/5/ 2024 0034 P EC என வரைவின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இவ்வாறு பகிரப்பட்டுள்ள ஆவணத்தில், தனிநபர் கையிருப்பு மதிப்புக் கணக்கீடு என்ற துணைத் தலைப்பின் கீழ் பொதுமக்கள் வைத்துள்ள தங்கம், வைரம் மற்றும் இரத்தின நகைகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தங்க கையிருப்புடன் கூடுதலாக தனியார் கையிருப்பு மதிப்பை கணக்கிடுவதே இதன் நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் திருமணம், பிறந்தநாள் விழாக்கள், ஒன்றுகூடல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் எனவும், அதற்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய கலாச்சார கூட்டு நிதியத்தில் இவை சேமிப்பில் வைக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்பொருள் அங்காடிகளில், உணவகங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது ஒரு தடவைக்கான தனிப்பட்ட பாவனை அதிகபட்ச கொள்வனவுத் தொகை இருபதாயிரம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டுமே உள்நாட்டு எரிவாயு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஆவணம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என அக்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ள காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் இந்த ஆவணம் அக்கட்சியினதா என factseeker ஆராய்ந்து பார்த்தது.

 

இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபெசின்ஹ மற்றும் கட்சியின் ஊடகப் பிரிவிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார கொள்கை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை எனவும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த ஆவணம் போலியானது என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தியிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தற்போது வரையிலும் நில அளவையாளர்கள், பொறியியலாளர்களின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சித் திட்டம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

ஆகவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணமானது தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைத்திட்டம் அல்ல என்பதையும் அது போலியான ஆவணம் என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *