இலங் கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக சென்னையில் பெண்கள் கூட்டமைப்பு நடத்தி வந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பேர் கடந்த 13-ந் தேதி முதல் மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 5 பெண்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை மற்றும் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக போராட்டக் குழு தலைவர் பேராசிரியை சரஸ்வதி அறிவித்தார்.
இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், சோனியாவே போரை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் நடத்திய இந்த போராட்டத்தை சோனியா காந்தி தாயுள்ளத்தோடு செவி சாய்ப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவரிடம் இருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக காங்கிரசின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இன்னும் 2 நாட்களில் சோனியாவிடம் இருந்து உரிய பதிலை பெற்றுத் தருவதாக கூறியதை ஏற்று 5 நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வரவில்லை. எனவே தமிழினத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்த கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டோம்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைத் தேர்தலை நோக்கி முழுமையாக திருப்பிய நிலையில் நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகத்தின் கவனத்தை தமிழின அழிப்புக்கு எதிராக திருப்பி இருப்பது எங்களுக்கு நிறைவை தருகிறது. கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் களம் இறங்கியுள்ள நிலையில், நீதிபதி கிருஷ்ணய்யர், மேதா பட்கர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வது, தொடர் உண்ணாவிரதம், தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் பிரசாரம் ஆகியவற்றை செய்ய இருக்கிறோம்.எங்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இடம் தந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு நன்றி கூறுகிறோம் என்றார் அவர்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகி மீனா கிருஷ்ணசாமி, உண்ணாவிரதம் இருந்த 15 பெண்களுக்கும் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
நண்பன்
இதையாவது ஒழுங்கா செய்யுங்க
DEMOCRACY
பேராசிரியர் சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்,நீண்ட கலமாக சோர்வில்லாமல் இந்தப்பிரச்சனையில் அவர் ஈடுபடுவது மலைப்பை தருகிறது!!.அவரின் ஆற்றலையும்,அளுமையையும் கண்டு வியப்படைகிறேன்.