டொக்டர் அர்ச்சுனாவின் ஆறுநாள் விடுமுறை நிறைவடைந்த நிலையில், தான் தற்போதும் பொறுப்பிலிருப்பதாகத் தெரிவிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தான் செல்ல இருப்பதாக டொக்டர் அர்ச்சுனா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். டொக்டர் அர்சுனாவை மத்திய அரசே நியமித்த காரணத்தால், நாளை தனக்கு இடமாற்றம் தரப்பட்டால் அதற்குக் கட்டுப்படுவேன் எனத் தெரிவித்துள்ள அவர், இடமாற்றக் கடிதம் மத்திய அமைச்சிலிருந்து வழங்கப்படாவிட்டால் தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியைத் தொடருவேன் என அவர் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னோடியாக நேற்றையதினம் (13) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவக் குழுவினரும் சாவகச்சேரி மருத்துவமனை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். மருத்துவமனையின் அபிவிருத்திச் சங்கத்தினர் தற்போது பொறுப்பேற்றுள்ள மருத்துவ குழுவினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்ததுடன், மூன்றுநாட்கள் திடீர் போராட்டத்தை நடத்த உங்களுக்கு யார் உரிமை தந்தது என்று கேட்டு துளைத்தெடுத்தனர். டொக்டர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
நாளை சாவகச்சேரிக்கு டொக்டர் அர்ச்சுனா வருவார் என்ற நம்பிக்கையில் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக பதின்ம வயது முதல் மக்கள் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளரும் லண்டன் கம்டன் கவுன்சிலில் புரஜக்ற் மனேஜராக இருந்து ஓய்வுபெற்று 2009 முதல் யாழில் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் மயில்வாகனம் சூரியசேகரம் இந்த மக்கள் போராட்டம் பற்றிய கள யதார்த்தத்தை தேசம்நெற் நேயர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்.
._._._._._.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சருடைய அலுவலகத்தில் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் சீரற்ற பிரச்சனைக்கு காரணமானவர்கள் என்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினாலும் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர்களின் பிரதிநிதிகளுக்கும் அந்த வைத்தியசாலை அபிவிருத்திசங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், வைத்தியர்கள் சார்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன, வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் தற்போதைய பதில் வைத்திய அத்தியகட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவி ஏற்றிருக்க கூடிய வைத்தியர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வைத்தியசாலை தொடர்பில் பரந்தளவான சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுகாதார பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.