அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று தம்புத்தேகம மிகவும் அபிவிருத்தியடைந்த நகரமாக மாறியுள்ளது. 1984 ஆம் ஆண்டு நான் இந்த பிரதேசத்திற்கு வந்தபோது எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க அந்தப் பாடசாலையில் கற்றார்.
அந்தக் கல்லூரியில் உயர்தரக் கல்வி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததால் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, நாம் ஆரம்பித்த களனிப் பல்கலைக்கழகத்தில் கற்று அதிலிருந்து பட்டம் பெற்று இப்போது நாடாளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
கல்வி வெள்ளை என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ஜே.வி.பி. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த கல்வி வெள்ளை அறிக்கையில் இருந்து உருவான அவர்
இன்று ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்திருப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்.
இது கல்வி முறையின் வெற்றியைக் காட்டுகிறது.
அநுரகுமார திஸாநாயக்கவும் நானும் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்படுகின்ற போதிலும் எமது அரசியல் வேறுபட்டது. சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார அரசியலின் ஆட்டக்காரர் மஹிந்த ராஜபக்ஷ என்று தெரிவித்தார்.
அது எனக்கு பிரச்சினை இல்லை. அவர் ஒரு ராஜபக்ஷவாதி என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.
அரசில் பல ராஜபக்ஷவாதிகள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானவர்கள் பலர் உள்ளனர். ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது.
எந்த நாட்டிலாவது பிரதமர் பதவி வேண்டுமா என கையேந்திச் சென்றதுண்டா? 3 நாட்களாக பிரதமரை தேடினார்கள்.
வேறு நாடுகளின் அரசியலில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. எந்த நாட்டிலும், ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பவர் ஜனாதிபதியானதுண்டா? இந்த வீழ்ச்சியடைந்த அரசியல் முறைமையில் இருந்து இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம்.
அரசியலை தவிர்த்து உழைத்ததால் அந்த வெற்றியைப் பெற முடிந்தது. அதற்குமுன் எங்களுக்குள் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் இருந்தன. ஆனால் நாடு வீழ்ச்சியடையும்போது அவ்வாறு செயற்பட முடியாது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.