போல் சத்தியநேசன்: இன, மத, சாதி பேதங்கள் கடந்த மானிடன்!

நான் 1991 ஜனவரியில் பிரித்தானிய மண்ணுக்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்த போது, இந்த மண்ணில் எனக்கு முதன் முதல் அறிமுகமாகியவர்கள் தயாமயூரனும், போல் சத்தியநேசனும். அப்போது போல் சத்தியநேசனை எனக்கு யாரென்றே தெரியாது. இரு வாரங்களாக இன்னுமொரு பாதுகாப்பான நாட்டினூடாக ஸ்பெயினூடாக பிரயாணம் செய்ததன் காரணத்தால் நாங்கள் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு முயற்சி எடுத்தது. நாங்கள் ஆறுபேர் தரையிறங்கி இருந்தோம். அந்த 1991 லண்டனில் வரலாறு காணாத பனிகொட்டி தலைநகரே ஸ்தம்பித்து இருந்தது. நாங்கள் தடுத்து வைத்திருந்த 14 வரையான நாட்களில் முதன் முதலாக ‘சீரியல்’ என்ற உணவை பார்த்தோம். அதற்கு பால் ஊற்றி சாப்பிட வேண்டும் என்பதும் தெரியாது. இலங்கையிலிருந்து கொண்டு வந்த சேர்ட், சறம், சப்பாத்து அணிந்து எதிர்காலம் பற்றிய ஏக்கத்தில் பேதலித்துப் போயிருந்த காலம். உறவுகளைப் பிரிந்து எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்றது.

அப்போது போல் சத்தியநேசனும் மற்றும் சிலரும் பிரித்தானியாவில் தமிழ் அகதிகளுக்கான அமைப்புகளை நிறுவி பெரும்தொகையில் வந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார். வசந் என்னுடைய மூத்த சகோதரன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சார்ந்தவர். அவரோடு பயிற்சி பெற்றவர், நண்பர் தயாமயூரன். நான் லண்டன் வந்திறங்கியதும் அவரைத் தொடர்புகொண்டேன். அப்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வானொலிச் செய்திச் சேவைகளை ஆரம்பித்து இருந்தது. அன்று தகவல்தொழில்நுட்பம் வளராத காலகட்டம். தொலைபேசி, கடிதம் என்ற பாரம்பரிய தொடர்புசாதனங்களே வெளிநாடு வந்த தமழிர்களுக்கு பயன்பாட்டில் இருந்தது. இலங்கைச் செய்திகளைச் சேகரித்து அவற்றை தொலைபேசியில் பதிவிட்டு வெளியிடுவார்கள். அந்தத் தொலைபேசிக்கு போன் பண்ணினால் பதிவு செய்யப்பட்ட செய்தியைக் கேட்கலாம். இந்தச் செய்திப் பதிவை தற்போது பெர்ஸ்ற் ஓடியோ கலையகம் – பாமுகம் நடாமோகனே பதிவு செய்து வந்தார். நடாமோகனுடனேயே போல் சத்தியநேசனும் அக்காலத்தில் சேர்ந்து செயற்பட்டார். நடாமோகன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகச் செயற்பாட்டாளராக இருந்ததால் போல் சத்தியநேசனும் கழகச் செயற்பாட்டாளர் ஆனார். வெளிநாடுகளுக்கு ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரே அதிகம். புளொட் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவும் அதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய விடுதலை அமைப்புகளை கொன்றொழித்ததாலும் போராடச் சென்ற எழுபதுகளுக்கு முன் பிறந்த அத்தலைமுறையினர் தங்கள் உயிரைப் பாதுகாக்க மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அதனால் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளின் செல்வாக்கு சற்று குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது.

அதன் பின் 1980க்களுக்கு முன் பிறந்த தலைமுறையினர் என் போன்றவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தோம். அவ்வாறு புலம்பெயர்ந்த எங்களுக்கு எங்களுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் போல் சத்தியநேசனின் உதவிகள், செயற்பாடுகள் புதிய மண்ணைப் பற்றிக்கொள்வதற்கான ஆதாரமானது. இந்த உதவிகளுக்கு பின்னால் இன்னும் பலருடைய உழைப்புகளும் இருந்தாலும் போல் சத்தியநேசன் இதனை தனது முழுநேரக் கடமையாகவே செய்து வந்தார். நான் உட்பட என்னுடன் வந்த ஆறு பேரும் அரசியல் தஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு வாரங்களில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோம். அடுத்த ஆறு ஆண்டுகள் என்னை நிலைப்படுத்திக் கொள்ள, வந்த கடன் அடைக்க, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்க, சுற்றி உள்ளவர்களின் சுமைகளைக் குறைக்க என்று வேலை, படிப்பு என்று ஓடியது.

பின் படிப்படியாக எனது சமூக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பிக்க போல் சத்தியநேசனுடனான உறவு வலுக்க ஆரம்பித்தது. 1997இல் தேசம் சஞ்சிகையை ஆரம்பித்தேன், 2000 மாம் ஆண்டுகளில் லண்டன் உதயனில் கடமையாற்றினே;. அதன் பின் லண்டன் குரல் பத்திரிகையை ஆரம்பித்தேன். 2007 இல் தேசம்நெற், 2023இல் தேசம்திரை என்று எனது ஊடகப் பயணம் தொடர எனக்கும் போலுக்குமான உறவு நெருக்கமானது. போல் சத்தியநேசன் பற்றிய செய்திகள் அன்றைய எனது ஊடகங்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான நிகழ்வுகளில் போல் சத்தியநேசனும் நானும் கலந்துகொள்வோம். போல் சத்தியநேசனுக்கு மிகப் பிடித்த விடயம் ‘மைக்’ அதனை வாங்கினால் வார்த்தைகள் சரளமாக கிறிஸ்தவத் தமிழில் மடைதிறந்து பாயும். கருத்துக்களுக்கு பஞ்சமில்லாத, எந்தச் சூழலிலும் தனது கருத்தை லாவகமாக வைத்துவிடுவார். அந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் ஒரு முற்போக்கான அணுகுமுறை அல்லது மக்கள் நலன் இருக்கும். அது எனது ஊடகத்தில் அடுத்த இதழில் செய்தியாகிவிடும்.

அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் செயற்பாடுகள், அகதிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தமிழ் மக்களை இம்மண்ணின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் விடயங்களில் போல் சத்தியநேசன் மிகத்தீவிரமாகச் செயற்பட்டவர்.

போல் சத்தியநேசனின் பாரிய முயற்சிகளில் ஒன்று தமிழ் மக்களிடையே உருவான வன்முறைகளைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சி. அதில் பாரிய வெற்றியையும் போல் சத்தியநேசன் அடைந்தார். ஒப்பிரேசன் என்வர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கொட்லன்ட் யாட்டின் வன்முறைக்குழக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அத்திவாரம் இட்டவர் போல் சத்தியநேசன். லண்டன் தெருக்களில் தமிழ் இளைஞர்களின் இரத்தம் சொட்டுவதை அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு அளப்பெரியது. என்னையும் எனது குடும்பத்தையும் கொல்லுவோம் என்று என்னை மிரட்டிய குழுவைத் தேடிப் பிடித்து நண்பர் டேவிட் ஜெயத்தின் உதவியோடு சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது என்னோடு கூட வந்து அந்த 30 வரையான இளைஞர்களோடும் உரையாடி அதனை சுமூகப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு முக்கியமானது. நண்பர் தோழர் டேவிட் ஜெயம் இல்லையென்றால் அது சாத்தியமாகியிராது.

அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட விடயம் ‘தைத் திங்கள்’ கொண்டாட்டம். இதனை 20 ஆண்டுகளுக்கு முன்னரேயே திட்டமிட்டு கடந்த 20வது ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கொண்டாடி வந்தவர் போல் சத்தியநேசன். தைத் திருநாளன்று ஈஸ்ற்ஹாமில் உள்ள அலங்காரத் தெருவிளக்குகளை மேயரை அழைத்து வந்து ஏற்றி தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஈஸ்ற்ஹாமின் விழாவாக மாற்றியவர் போல் சத்தியநேசன் என்றால் மிகையல்ல. யூலை 12 போல் சத்தியநேசனுடைய நினைவுக் கூட்டம் அதே தைப்பொங்கல் விழா கொண்டாடப்படும் வீதியில் அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் உரையாற்றிய ஈஸ்ற்ஹாம் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் வேர்க் அன் பென்சன் (Work & Penssion Minister) அமைச்சருமான ஸ்ரிபன் ரிம்ஸ் (Stephen Timms) தனது உரையில் அதனை நினைவு கூர்ந்தார். அங்கு உரையாற்றிய ஏனைய கவுன்சிலர்கள் பலரும் அதனை நினைவு கூர்ந்தனர்.

போல் சத்தியநேசனிடம் உதவி, ஆலோசணை பெறாத ஒருவர் ஈஸ்ற்ஹாமில் இருப்பாரா என்பது சந்தேகம். அவருக்கு என்று ஒரு வீடு இருந்தாலும் ஹைஸ்ரிட் நோத் (High Street North) தான் போலின் முகவரி. அதிலுள்ள ஏதாவது ஒரு கடையில் அலுவலகத்தில் போலைக் காணலாம். இவ்வாறு போல் சத்தியநேசன் பற்றிய கதையாடலை அடுக்கிக் கொண்டே போகலாம். என்னைப் போல், போல் சத்தியநேசனை அறிந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதையிருக்கும். போல் சத்தியநேசன் இல்லாமல் பிரித்தானிய தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ய முடியாத அளவுக்கு வரலாறான தோற்றத்தால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்த மாநிடன். ஒரு கிறிஸ்தவ தமிழனாக இருந்த போதும் ஈஸ்ற்ஹாமிலும் லண்டனிலும் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக்களில் போல் சத்தியநேசனைக் காணலாம். பள்ளிவாசலிலும் காணலாம். அதனால் தான் ஈஸ்ற்ஹாமை போல் புண்ணிய பூமி என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

போல் சத்தியநேசன் ஒரு பெருமிதமற்ற மனிதர். அவர் ஒரு போதும் பணத்திற்கு ஆசைப்பட்டவரும் கிடையாது, அதற்கு பணிந்துபோனவரும் கிடையாது. அதனை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மதிப்பவரும் கிடையாது. வயது வித்தியாசமின்றி அனைவரோடும் தன்னை இணைத்துக்கொண்டு உரையாடலை வளர்க்க அவர் ஒரு புள்ளியை இனம்கண்டுகொள்வார். குறிப்பாக பெண்களோடு உரையாடுவது என்றால் அவருக்கு தனிப்பிரியம். அதனை நாங்கள் நண்பர்கள் கூடினால் நையாண்டி பண்ணிக்கொள்வோம். நைற் கிளப்பிற்குச் சென்றிருந்த போது யாரையோ உரசியதற்காக உடனே வோஸ்ரூம் சென்று கையைக் கழுவி வந்த ‘சைவம்’ விரும்பும் மனிதன் போல் சத்தியநேசன் என நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொள்ளாத பிரம்மச்சாரியாகவே தன் வாழ்க்கையில் சிங்கிளாக இருந்து கெத்துக் காட்டியவர். போல் இருக்கும் இடம் என்றைக்குமே சச்சரவாகவும் கலகலப்பாகவும் இருக்கும். அண்மையில் கூட தன்னுடைய நண்பர்களோடு உரையாடும் போது, “நீங்கள் நான் போனபிறகு செத்தவீட்டுக்கு வந்து றீல் விடுறத விட்டுப்போட்டு இப்ப உயிரோட இருக்கேக்க சாப்பாடைக் கொண்டு வந்து பார்த்திட்டு போங்கோ’ என்று பகிடியாக சில நண்பர்களிடம் கூறியுள்ளார். “என்ர பொடியை வைச்சுக் கொண்டு செத்தவீட்டில எதாவது கணக்கு கதைச்ச ஆவியாய் வந்து அடிப்பன்” என்று சிலரை மிரட்டியும்உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் எனது இணையரோடு ஈஸ்ற்ஹாம் வந்திருந்த போது சந்தித்து, உணவருந்த அழைத்தேன். ‘விழுந்து நடக்க கஸ்டமாய் இருக்கு அடுத்த முறை வரும் போது போன் எடும், நான் வந்து சந்திக்கிறேன்” என்றார். அது தான் அவருடன் என்னுடைய கடைசி உரையாடல். யூலை 5 எனது பள்ளி மாணவர்களைக் கூட்டிக்கொண்டு பேர்மிங்ஹாம் சொக்லேட் பற்ரிக்கு சென்றிருந்தேன். செல்லும் வழியில்தான் போல் சத்தியநேசன் எம்மை விட்டுப் பிரிந்த செய்தியை அறிந்தேன். கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுப் பயணத்தை மீள்பயணம் செய்து வந்திறங்கினேன். நோயின் அனைத்து வலிகளில் இருந்தும் அவருக்கு ஒரு விடுதலை கிடைத்துள்ளது. போல் சத்தியநேசனுக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்பம் இல்லை. ஆனால் போல் சத்தியநேசனின் குடும்பம் மிகப்பெரியது. ஈஸ்ற்ஹாம் என்ற குடும்பத்தில் போல் தலைமகன். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவர் உறவுகள்.

அண்மைய சில ஆண்டுகள் வரை இந்த உறவு தொடர்ந்தது. கவுன்சிலர் போல் முன்னாள் கவுன்சிலராக நோயும் ஆட்கொள்ள அவருடைய நடமாட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டது. நானும் என்னுடைய ஆசியர் பயிற்சி, தொழில் நிமித்தம் லண்டனுக்கு வெளியே சென்றதால் எமது உரையாடல்கள் தொலைபேசி உரையாடல்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

நீண்ட காலமாகவே பல்வேறு நோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த போல் சத்தியநேசன் வீட்டில் கட்டிலால் வீழ்ந்து, கையில் நோபட்டு இருந்தார். அவரை யூலை நான்கு சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்திருந்தனர். யூலை நான்கு இரவு நன்பர்கள், சகோதரர் உணவு பரிமாறி உரையாடித் திரும்பியதன் பின்னர் மறுநாள் அதிகாலை போல் சத்தியநேசன் உயிர்நீர்த்துள்ளர்.

குட்டி யாழ்ப்பாணமான ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் முன்னாள் மேயர் கவுன்சிலர் அதற்கும் மேலாக அங்குள்ள மக்களின் மனங்களை வென்ற போல் சத்தியநேசனின் இறுதி நிகழ்வுகள் யூலை 17ம் திகதி முறையே அவர் வாழ்ந்த பேர்ஜஸ் றோட்டில் (Burgess Road உள்ள சென் போல் St Paul Church தேவாலயத்தில் காலை 10 மணி முதலும் அடுத்து மனோபார்க் மயானத்தில் மாலை 2 மணிக்கு நல்லடக்கமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ப்ளேக் ஹோல் றோட்டில் (Blake Hall Road உள்ள சுவாமிநாராயணன் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் Swaminarayanan Sports World இல் மாலை 3 மணிக்கு ஒன்றுகூடலும் நடைபெற இருக்கின்றது.

இன, மத, சாதி பேதங்கள் கடந்த நல்லதொரு மானிடன் போல் சத்தியநேசன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்யப்பட்ட வெவ்வேறு நினைவு நிகழ்வுகளில் அப்பிரதேச மக்கள், லண்டனில் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள், ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் கவுன்சிலர்கள், நண்பர்கள், அவரின் பிறப்பிடமான உரும்பராயின் சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் என நூற்றுக்கணக்கில் வந்து அஞ்சலி செய்தனர். ஈஸ்ற்ஹாம் யை தன்னுடைய வாழ்விடமாக்கி அதற்கு ‘புண்ணிய பூமி’ என்று புகழ்ந்துரைக்கும் போல் சத்தியநேசன் அந்த மண்ணோடு சங்கமமாக உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *