பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறித்த நிகழ்வின் போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும்.
அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன்.
பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நாளை சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.