நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து !

நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், கம்பஹாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

“ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

எனக்கு வழங்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்துள்ளேன். நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை.

பொருளாதாரம் ஒன்றில்லாத, அரசாங்கமொன்று இல்லாத ஒரு நாட்டையே நான் சவாலுக்கு மத்தியில் பொறுப்பேற்றேன். நெருக்கடிக்கு மத்தியிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு பலரிடம் கோரியிருந்தேன். அப்போது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நாம் கூட்டணியொன்றை ஆரம்பித்தோம்.

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவியது. மின்வெட்டு காணப்பட்டது. அவ்வாறான ஒரு நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

 

எனவே, நாம் மேலும் முன்னொக்கி செல்ல வேண்டும். நம் நாட்டில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

 

இன்று எமக்கு கடன்வழங்கும் நாடுகள் இலங்கை தொடர்பாக நம்பிக்கை கொண்டுள்ளன. நாட்டில் முதலீட்டு திட்டங்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

நாட்டு மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலத்தை அரசியல் வாதிகளின் தேவைகளுக்குயேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. நாடு தொடர்பில் சிந்தித்தே செயற்பட வேண்டும்.

 

சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திசாநாயக்கவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டின் கொள்கைகளுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *