வடக்கு, கிழக்கில் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களுக்காக தமிழ் தலைவர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். – பிள்ளையான்

வடக்கு, கிழக்கில் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களுக்காக சில தலைவர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் பொது வேட்பாளர் விவகாரமும் அவ்வாறு நேரத்தை வீணடிக்கும் செயற்பாடே. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தமிழ் மக்களின் நம்பிக்கை மேலெழுந்துள்ளதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலைமையில் தான் இன்று தமிழரசு கட்சி காணப்படுகிறது. ஒரு சிலர் வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சில தலைவர்கள் அவர்களது சித்தாந்தத்தின் அடிப்படையில் நாட்டை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

அவர்கள் நடைமுறை சாத்தியமற்ற, மீண்டும் மீண்டும் மக்கள் தோல்வியடையக் கூடிய சிந்தனைகளில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களது எண்ணங்கள் சாத்தியமற்றவை. ஆனால் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்கக் கூடிய புத்திசாலிகளாகவே இருக்கின்றனர்.

 

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு அதிகார பரவலாக்கலிலும் அவதானம் செலுத்தக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. அவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. கடந்த காலங்களில் தான் வகித்த வகிபாகம், 13ஆவது திருத்தத்தின் வெற்றி, தோல்வி, விடுதலைப்புலிகளுடனான உடன்படிக்கைகள் உள்ளிட்டவற்றில் அவரும் பங்கேற்றுள்ளார்.

 

தேர்தலின் பின்னர் தன்னால் முடிந்த வரை மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். அவர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே அவர் இந்த நாட்டுக்கு ஆற்றக் கூடிய மிகப் பாரிய பணியாக இருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யக் கூடிய வாய்ப்பிருந்த போதிலும், கடும்போக்குவாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை.

 

எவ்வாறிருப்பினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவற்றை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் மேலெழுந்திருக்கின்றது. அவ்வாறு அவர் செய்யும் பட்சத்தில் உலகலாவிய பிரபல்யமடைந்த தலைவராக அவர் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் கூட இருக்கின்றன என்றார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *