பங்களாதேஷின் க்ஷ இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, அவர் நேற்று (08) இரவு 8 மணியளவில் பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.
இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்ததுள்ளார்.
இதனால் இடைக்கால அரசு அமையும் என அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில், இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டுள்ளது.
பெரும்பாலும் மாணவர்களால் வழிநடத்தப்பட்ட ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் நாட்டின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு முஹம்மது யூனுஸும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், யூனுஸ், வன்முறைகளையும் போராட்டங்களையும் விடுத்து கோரிக்கை முன்வைக்குமாறும் அமைதியான முறையில் ஆட்சி நடத்த வழிவகுக்குமாறும் மக்களிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என்று அழைக்கப்படும் முகமது யூனுஸ் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவா். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
எனினும், முகமது யூனுஸின் வங்கி நடவடிக்கைகள் தொடா்பாக ஷேக் ஹசீனாவின் அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.