தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்களை தவிர்க்க வேண்டும். இந்த செயல் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலில் சிலர் பல்வேறு தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் வேட்பாளராக களமிறங்க நாளாந்தம் முன்வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சுதந்திர்ததை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் காண்கிறோம். வேட்பாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்.
இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வருபவர்களில் சிலர் அவர்களின் சொந்த காரணங்களுக்காக முன்வருபவர்களை தவிர்க்க வேண்டி இருக்கிறது. வேறு சிலர் வெளிநாட்டு தூதுவர் சேவைகளுக்கு செல்வதற்கு அல்லது வெற்றிபெறும் வேட்பாளரிடமிருந்து அரச திணைக்களங்களின் தலைவர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரபல்லியமடையும் நோக்கில், சுதந்திர ஊடக சந்தர்ப்பத்தை பெறறுக்கொள்ளும் நோக்கில் அல்லது வாக்கு சாவடிகளில் தங்களின் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்வதற்கு போன்ற இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் அல்லாத வேறு காரணங்களுக்காக வேட்பாளர்களாக முன்வருகின்றனர்.
2010 ஜனாதிபதி தேர்தலில் 35பேர் வேட்பாளர்களாக களமிறங்கி இருந்தனர். இவர்களில் 33 பேரும் இணைந்து 2.5 வீத வாக்குகளையே பெற்றிருந்தனர். அதனால் வரலாறு முழுவதும் நாங்கள் ஆராய்ந்து பார்த்தால், பிரதான வேட்பாளர்களைத்தவிர ஏனையவர்களுக்கு நூற்றுக்கு 2வீத வாக்குகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இவர்கள் அனைவரதும் கட்டுப்பணம் அரசுடைமையாகிறது.
அதேநேரம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் வாக்குச்சீட்டின் அளவு அதிகரிக்கிறது. அதன் காரணமாக தேர்தல் செலவும் அதிகரிக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் இறுதிநாள் எதிர்வரும் 14ஆம் திகதியாகும். இதுவரை 27பேர் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றனர் என்றார்.