பங்களாதேஷை அமெரிக்காவை ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
பதவி விலகுவதற்கு முன்னர் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால், அவரது வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டதால், உடனடியாக கிளம்பும்படி பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் உரையாற்றாமல் அவர் அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்தார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்த குறிப்பு தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், “பங்களாதேஷில் சவ ஊர்வலம் நடப்பதை பார்க்க விரும்பாததால் நான் பதவி விலகினேன். மாணவர்கள் உடல் மீதேறி ஆட்சிக்கு வர எதிராளிகள், விரும்பினர். அதனை நான் அனுமதிக்கவில்லை.
நான் தடுத்து நிறுத்தி இருக்கிறேன். வங்கக்கடலை அமெரிக்காவை ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன்.
பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். நான் தொடர்ந்து பதவியில் நீடித்து இருந்தால், இன்னும் பல உயிர் பறிபோயிருக்கும்.
என்னை நானே அகற்றிக் கொண்டேன். நீங்கள் தான் எனது பலம். என்னை நீங்கள் வேண்டாம் என்றீர்கள். நான் வெளியேறிவிட்டேன். அவாமி லீக் கட்சியினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். விரைவில் நான் மீண்டும் வருவேன். நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால், எனது குடும்பம், எனது தந்தை யாருக்காக உயிர் தியாகம் செய்தார்களோ, அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.’’ என குறிப்பிட்டுள்ளார்.