அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை காலை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கோரியுள்ளார். கரையோரப் பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், லகுகலை ஆகிய பத்து பிரதேச செயலாளர்களிடமிருந்தே இது தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
அதிகளவில் பொத்துவில், லகுகலை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பல கட்டிடங்கள் அதிகமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய கரையோரப் பகுதிகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் இருந்து தெரியவருகிறது.
கடல்கோள் போன்ற அனர்த்தங்களை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடிய கருவிகள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் அமைப்பது போன்று நிலநடுக்கம் தொடர்பாக முன்னறிவித்தல் சமிக்ஞை நிலையங்களும் கரையோரத்தில் மூன்று இடங்களில் அமைக்கவிருப்பதாகவும் அவற்றில் ஒன்று பாணமைப் பகுதியிலும் அமைக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியிலுள்ள மக்கள் கடல்கோள், நிலநடுக்கம் காரணமாக இந்தப் பீதி அச்சத்துடனும் இருப்பதாக பரவலாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னோடியாக மழையும் காற்றும் இடி மின்னலும் காணப்படுவதே பீதிக்குக் காரணமென சொல்லப்படுகிறது.