கடந்த 6 வருடங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க அளவில் அபிவிருத்தி கண்டுள்ளதுடன் தென்கிழக்குப் பிராந்திய மக்களின் கல்வியிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறதென தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக “சீடா’ மீளமைப்புத் திட்டத்தினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “அனர்த்த முகாமைத்துவம்’ எனும் தலைப்பிலான பயிற்சிச் செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.
சீடா மீளமைப்புத் திட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் கலாநிதி என்.டபிள்யூ.பி. பாலசூரிய தலைமையில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில் மேலும் தெரிவிக்கையில்; கல்வி நடவடிக்கைகளில் மாத்திரமன்றி மக்களின் அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் இந்த “சீடா’ திட்டத்தை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வந்துள்ளது.
ஊடகவியலாளர்கள் இங்கு பெற்றுக் கொண்ட தமது பயிற்சிகளை சமூகம் பயன்பெறக் கூடியவாறு மீள வழங்க வேண்டும். அத்தோடு, அனர்த்த அபாயத்திற்குள் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்களை நாம் வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
இதேவேளை, சொற்ப காலத்தில் எனது உபவேந்தர் கடமையை நிறைவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். எனது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊடகவியலாளர்கள் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறேன்.
எனக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று வருகின்ற புதிய உபவேந்தருக்கும் ஊடகவியலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் இப்பிராந்தியத்தின் கல்வி, பொருளாதார, சமூக ஈடேற்றத்திற்கு பெறுமதியான பங்களிப்புகளை நல்க வேண்டுமெனத் தெரிவித்தார்.