யாழ்.குடாநாட்டில் போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ள பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு கோரல்

jaffna-map.jpgநீதிமன்றம், அரச அதிபர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடனேயே யாழ்.குடாநாட்டில் பொலிஸார் போக்குவரத்துக் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். இவற்றின் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கும் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றையும் பொலிஸாரின் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருப்பதாக யாழ்ப்பாணப் பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் பொலிஸாரினால் அமுல் படுத்தப்படுகின்ற வீதிக்கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்;

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி யாழ்.குடாநாட்டில் பொலிஸாரால் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக வீதிக் காண்காணிப்பு நடைமுறைப் படுத்தப்படாமையால் மக்களை அவற்றுக்குப் பழக்கப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் அவர்களுக்கான வீதிப் போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கிவருகின்றோம்.

குடாநாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் தினமும் யாழ்நகருக்கு வருகைதருகின்றனர். யாழ்நகரில் அமுல்படுத்தப்படுகின்ற வீதிப் போக்குவரத்து நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனை அவர்கள் தங்கள் பிரதேசங்களிலும் கடைபிடிக்கின்ற போது விபத்துகள் குறைகின்றன. இதனாலேயே வீதிக் கண்காணிப்பு நடைமுறையில் நகர்ப்புறத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ் வீதிக் கண்காணிப்பின் போது மோட்டார் சைக்கிள்களில் இருவர் பயணித்தால் அவர்கள் இருவரும் தலைக் கவசம் அணிவது முக்கியமானதாகும். அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் மற்றும் வாகன வரி அனுமதிப்பத்திரம் என்பனவும் பரிசீலிக்கப்படுகின்றன. அத்தோடு துவிச்சக்கரவண்டிகளில் சமாந்தரமாகச் செல்வோரும் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இவ் வீதிக் கண்காணிப்பின்போது உரிய ஆவணங்கள் இல்லாதோர் மற்றும் விதிகளை மீறுவோருக்கு கடந்த முதலாம் திகதியிலிருந்து தண்டம் விதிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றது பாடசாலை மாணவர்களுக்கும் வீதிப்போக்குவரத்து தொடர்பான விபரங்கள் வழங்கப்படுகின்றன.இதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கிறது.

இவற்றோடு யாழ்.குடாநாட்டில் மக்களுக்கு ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்கின்ற பொலிஸார் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றனர் என்றும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *