தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை சட்டத்தரணியான ஷான் ரணசூரிய தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக போட்டி ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளமையினால், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நீதி அமைச்சர் பதவிக்கு அலி சப்ரியை நியமித்துள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதுடன், தனது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.