வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கு விசேட வைத்திய சிகிச்சையை வழங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார். புல்மோட்டை, செட்டிக்குளம், வவுனியா போன்ற இடங்களுக்கு விசேட வைத்தியக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை வைத்தியசாலையில் இருந்து டாக்டர் அஜ்வத் தலைமையிலான 4 வைத்தியர்களும், 4 தாதியர்களும் செட்டிக்குளத்திற்கும், மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் அச்சுதன் தலைமையில் 4 வைத்தியர்களும் 5 தாதியர்களும், வவுனியா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் புல்மோட்டையில் வைத்திய சிகிச்சை அளிக்க டாக்டர் டிக்சன் தலைமையில் 4 வைத்தியர்களும் 4 தாதியரும் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுச் சுகாதாரத்தைக் கண்காணிக்க குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி தாலைமையிலான சுகாதார வைத்திய அதி காரிகள், தொற்று நோயியல் நிபுணர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.