பன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது
மெக்ஸிகோவில் பெருமளவில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலின் காரணமாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த சர்வதேச கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தத் தொற்றின் மூலம் ஐரோபபாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மெக்ஸிகோ நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த ஒரு ஆடவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்தத் தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தான் அறிவுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் ஆண்ட்ரௌலா வாஸிலோவ் கூறியுள்ளார்.
இது ஒரு அறிவுரை மட்டுமேயன்றி பயணத்தடை அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் தொற்று கவலையளிக்கக் கூடிய ஒரு விடயம் என்றாலும் இதன் காரணமாக கலக்கமடைய வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளளார்.