தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட 600 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அரிசி உட்பட அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை அதிகரித்த விலையில் விற்பனை செய்த குற்றங்களுக்காகவே பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் குறைந்த விலையில் தமக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இதன் ஒரு அம்சமாக விசேட குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
அரசாங்கம் ஏற்கனவே வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை வர்த்தகர்களுக்கு வழங்கியிருந்தது. எனினும் நிர்ணய விலையை மீறி சில வர்த்தகர்கள் அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இத்தகையோரே கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரவுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.