2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்கள் – விஜயகலா மகேஸ்வரன்

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (21) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த தலைவர்கள் எப்படி இந்த நாட்டை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

கொரோனா மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு நாட்டை மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும் அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

அது மாத்திரமல்ல, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குவதாக அமெரிக்க தூதுவர் கூறியிருக்கின்றார்.

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்பொழுது இருக்கும் ஜனாதிபதிக்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

அன்று மக்கள் வாக்களித்திருந்தால் இன்று எமது மக்கள் இழப்புக்களை சந்தித்திருக்க மாட்டார்கள். யுத்த இழப்புக்கள், உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்களை தடுத்திருக்கலாம்.

அந்த பிழையை இனியும் விடாது அனைத்து தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், மலையக மக்களும், சிங்கள மக்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யாருக்கும் இருக்கின்றது.

ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் இந்த நாட்டிலே வாக்களிக்கவுள்ளனர். பாதாளத்தில் தள்ளப்பட்டிருந்த இந்த நாட்டை மீட்டெடுத்தவருக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அண்மையில் பங்களாதேஷில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்த பிரதமரை நாட்டை விட்டே வெளியேற்றியிருக்கிறார்கள்.

 

 

அதே போல இந்த நாட்டின் ஜனாதிபதியையும் துரத்தி ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்தார்கள். அவ்வாறான நிலையில் நாட்டை மீட்டுத் தந்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். அவருக்கு நீங்கள் கூடின வாக்குகளை வழங்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *