ஆங்சான் சூச்சிக்கு ஆதரவாக பர்மியர்களும் சர்வதேச சமூகத்தினரும் குரல்கொடுத்துவருகின்றனர் பர்மாவுக்கு எதிரான தண்டனைத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு ஆண்டு நீடித்திருக்கிறது.
பர்மாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவி ஆங்க் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
2006ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தடைகளை, ஜனநாயகம் தொடர்பில் பர்மாவின் ராணுவ அரசாங்கம் முன்னேற்றத்தை காட்டினால், இந்த தடைகள் தொடர்பில் தாங்கள் மீள்பரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள தடைகளின்படி, பர்மாவின் மூத்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும், பர்மாவுக்கு ஆயுதங்கள் அளிப்பதற்கும், பர்மாவின் தேக்கு, கனிமப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.