இடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.
கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.
யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.