ஈழம் தமிழர்களின் அன்னை பூமி – அங்கு தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமானதல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதே தேச விரோதமாகிவிடுமா என்று காங்கிரஸ் கட்சியைக் கேட்கிறார் அதிமுக தலைவர் ஜெயலலிதா.

 “வாழ வழியின்றித் தவிக்கும் தமிழர்கள் இலங்கையிலேயே கெüரவமாக வாழ, வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதுதான் இனி ஒரே வழி” என்று ஜெயலலிதா பேசியிருந்தார். அது சட்ட விரோதம் என்று மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தில்லியில் கண்டித்திருக்கிறார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

 “இந்தியாவிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி நாடு தாருங்கள் என்று நான் கேட்கவில்லை; இந்த நாட்டின் மீது அளவில்லாத பற்றும் பாசமும் உள்ளவள் நான். இலங்கையில் சம உரிமைகள் மறுக்கப்பட்ட, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழ் மக்கள் வாழ தனி ஈழம் வேண்டும் என்று கோருகிறேன். இலங்கையிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எப்படி தேச விரோதச் செயலாகிவிடும்?

 விடுதலைப் போருக்கான போராட்டம் என்று கூறி பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அதைக் கண்டித்து வருகிறேன்; தீவிரவாதத்தை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை. அதே சமயம், அரசின் அடக்குமுறையால் மக்களில் கணிசமானவர்கள் பாதிக்கப்படுவதையும் என்னால் கண்டிக்காமல் இருக்க முடியாது.

 இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்கள் கட்டுக்காவல் மிகுந்த சிறைச்சாலைகளைவிட மோசமான நிலையில் இருக்கின்றன. அங்குள்ளவர்கள் வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி கண்காணிப்பு நிலவுகிறது. குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும் வழி இல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாத நிலையில் தமிழர்கள் விலங்குகளைப்போல நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட முகாம்களுக்குப் போக வேண்டாம் என்ற உறுதியோடு வெட்ட வெளியில் தங்குகிறவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

 இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும், தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகள் தனியே பிரித்து அடையாளம் காணப்பட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களைப் போலவே அனைத்து உரிமைகளும் சமமாக வழங்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதை ஏற்க முடியாது என்கிறது இலங்கை அரசு. அப்படிப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி ஈழம் கேட்பது தவறா?

 தமிழர்கள் மட்டும் அல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற மேலை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் போரை நிறுத்திவிட்டு அரசியல் தீர்வுகாண பேச்சு நடத்துங்கள் என்று விடுத்த வேண்டுகோளையும் மதிக்க முடியாது என்று மறுக்கிறது இலங்கை அரசு. இந்த நிலையில் தமிழர்கள் மானத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ ஒரே வழி தமிழ் ஈழம்தான்.

 லட்சக்கணக்கான தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் தரும் ஒரு கோரிக்கை எப்படி இந்திய சட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும்? இதை எப்படி சட்ட விரோதமான பேச்சு என்று காங்கிரஸ்காரர்கள் கண்டிக்கிறார்கள்?’ என்று வினவுகிறார் ஜெயலலிதா.

திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரமாண்டமாக திரண்டிருந்த கூட்டங்களில் அவர் பேசினார். திருப்பூரில் அவர் பேசியதாவது..

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய ராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார். என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.எல்லாவற்றையும் செய்தது இந்தியாதான்…

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இந்திய ராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய ராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை ராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை ராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை ராணுவம் இந்திய ராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய ராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் ராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் ராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?. இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது கோத்தபாய கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

ஈழம் தமிழர்களின் உரிமை பூமி – அன்னை பூமி…

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான கபில் சிபல், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார். நான் சொன்னது எப்படி தேச விரோத கருத்து..

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது.

கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்து விட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் ஜெயலலிதா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    /இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட./— இது உண்மைதானே!.. வேறு எங்கு காணமுடியும்…., “யாராவது தாங்கள் பரம்பரையாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் படுகிறோம் என்று கூக்குரலிடுவார்களா?”. இலங்கைத் தமிழர்கள் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும், வெளியேறிய பெறும்பாலானோர்கள், தங்கள் சொந்த நலனுக்காக வெளியேறிவிட்டு, யாரோ வலிந்து வெளியேற்றியதாக பலர் மீது பழிப் போடுவது, சரியா?. இப்போது கூட இலங்கைக்கு சென்றால், அங்கு காலைக் கடன் கழிக்க “குமட்டு” இல்லை என்று திரும்பி வருபவர்களே அதிகம். இதையெல்லாம் மறைக்க, “வி வாண்ட் டமிலீலம்”, என்று, இந்திய தூதுவராலயத்தின் மீதும், சீன தூதுவராலயத்தின் மீதும் கல்லெறிவது சுலபமாக உள்ளது!, இது இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தி (உரிமை கேட்காததால்), புலன்பெயர்ந்த இலங்கைத்தமிழர் போலவே, “சிங்கள மக்களை கசக்கிப் பிழியும், “இலங்கை ஆளும் வர்கத்துக்கு” துனை போய், அவர்கள் தங்களுடைய அஜண்டாவை செயல்படுத்த உதவுகிறது- இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள், “இவ்வளவு கொடுமை நடந்த பின்பும்”, தமிழீழம் கேட்காமலிருப்பதுதான் அதிசயம்.

    Reply
  • thurai
    thurai

    //இலங்கையில் சம உரிமைகள் மறுக்கப்பட்ட, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழ் மக்கள் வாழ தனி ஈழம் வேண்டும் என்று கோருகிறேன்//

    தமிழருக்குள்ளேயே,தமிழரை இரண்டாம்,மூன்றாம்தர குடிமக்களாக நடத்துவோர் தலைவர்களாக உள்ளவரை தமிழரிற்கு உலகெங்கும் அடிமை வாழ்வுதான்.

    தமிழன் தன்னைத் தானே கட்டியுள்ள அடிமை விலங்கை உடைத்த பின்பே, தமிழனின் பகைவன் யாரென்ற் உண்மையை உலகம்றியும்.

    துரை

    Reply
  • rajan
    rajan

    செல்வி ஜெயலலிதா தேர்தலுக்காக பேசினாரோ என்னவோ சரியான நேரத்தில் சரியான விடயத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். அவருக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் மிக்க நன்றி. பேச்சுடன் மட்டும் நின்று விடாது அதனை எமக்கு பெற்றுத்தர வேண்டும் என்பது எமது அவா. ஆனால் செல்வி அவர்கள் சொன்னால் அதில் உறுதியாக இருந்து கடைப்பிடிப்பவர் என்பது உண்மை. கருணாநிதி போல் இன்று ஒன்று சொல்லி நாளை ஒன்று சொல்பவர் அல்ல. எல்லாம் அந்த ரவிசங்கர் ஐயாவுக்கு நன்றிகள் கோடி கோடி………!

    Reply
  • Kusumpan
    Kusumpan

    அம்மா ஏன் இவ்வளவு காலமும் தமிழருக்கு தனிஈழம் தேவை என்று தெரியவில்லை. இப்ப தேர்தல் வரும் போதுதான் எல்லாம் தெரிகிறது. அம்மா விழுந்தபக்கம் குறிசுடப்பழகிவிட்டா. புலிகள் தமிழ்ஈழம் கண்டு முடிந்தது இப்ப நீங்கள் காணப்போகிறியளாக்கும்… காணுங்கோ காணுங்கோ… இந்தியத் தமிழர்களைப் பேக்காட்ட இலங்கைத் தமிழர்கள் காவுகொடுக்கப்படுகிறார்கள். போரில் மட்டுமல்ல தேர்தலிலும் தான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அம்மணிக்கு தேர்தல் முடிய செலக்டிவ் அமினீசியா வந்துவிடும். அப்போது ஈழம் பற்றி நான் கதைத்தேனா?? அப்படியொன்று இருக்கவேயில்லையே, அப்புறம் அது பற்றி நான் எப்படிக் கதைத்திருப்பேன். இது எல்லாம் எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தவென்று கருணாநிதி கிளப்பி விட்ட வதந்தி என்று அறிக்கை விடுவார். அப்போ வைகோவும் பவ்யமாக பக்கத்தில் கைகளைக்கட்டிய படி நின்று கொண்டு ஆமா ஆமா எல்லாம் கருணாநிதியின் சதி என்று ஒத்தூதுவார். இதை எல்லாம் பார்க்க வேண்டியது எம் தலைவிதி……

    Reply
  • indiani
    indiani

    ஜெயலலிதாவை படு கேவலப்படுத்தும் அன்ரன் பாலசிங்கத்தின் உரைகளும் அதற்கு புலம்பெயர்ந்தோரின் விசிலடிகளும் இன்னமும் காதில் ஒலிக்கின்னது.

    Reply
  • mano
    mano

    அம்மையாரின் பிரதமர் கனவிற்குள் இப்படியும் ஒரு காட்சியா? கடல் கடந்தும் ஆழும் திட்டத்தில் உளறுகிறார் போலிருக்கிறது. பதவி ஆசை இப்படியா இவர்களைப் பிடித்தாட்ட வேண்டும். தேர்தல் பூசாரி வந்து பேயை விரட்டுவார் என நினைக்கிறேன். தமிழகத்திற்கு பிடித்த பேய் எங்கட இரத்தத்தையா குடிக்க வேண்டும்?

    Reply
  • msri
    msri

    செல்வியை மடக்க> (அன்னைபூமி தமிழஈழம்) இதைவிட வேறு என்னத்தைக் கையில் (போர்நிறுத்தம் உண்ணாவிரதமும் சரியே வரவில்லை)எடுக்கலாம் என கலைஞர் மண்டையைப்போட்டு உடைத்துக்கொணடு இருக்கின்றார்! இது கலைஞருக்கு மட்டுமல்ல> வை.கேர. வைத்தியருக்கும் வைத்தெரிச்சல்! 3-வது அணி பாணடியன் -வரதராசன்>க.கடசிக்கார்களுக்கும் (தமுழ்ஈழம் பிடிக்காத சுயநிரனயக்காரர்கள்) சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி செல்வியைப் பார்க்கின்றார்கள்! அது சரி கோத்தபாயா சொல்லிப்போட்டார் செல்வியின்ரை “தமிழ்ஈழம்” இலங்கையிலை சரிவராது என்று…..

    Reply
  • சட்டம்பிள்ளை
    சட்டம்பிள்ளை

    இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா கூறிய தனி ஈழம் என்ற கருத்து “அரசியல் சந்தர்ப்பவாதம் ‘ என காங்கிரஸ் கூறியுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு, தனி ஈழம் தான் ஒரே வழி என்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். இலங்கை பிரச்சினையில் ஜெயலலிதாவின் புதிய நிலை குறித்து, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த ஜெயந்தி நடராஜன்”” தேர்தலை கருத்தில் கொண்ட ஜெயலலிதாவின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதை தவிர வேறு என்ன சொல்வது?’ என்றார்.

    Reply
  • BC
    BC

    //Rajan – ரவிசங்கர் ஐயாவுக்கு நன்றிகள் கோடி கோடி//
    வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், காஷ்மீர் அகதிகள் நிலையைவிட சிறப்பாக உள்ளதாக உண்மையை சொன்னதுக்கு அவருக்கு நன்றி சொல்லதான் வேண்டும். புலி ஆதரவாளர்கள் வவுனியா வதை முகாம் என்றல்லவா பிரசாரம் செய்கின்றனர்.

    Reply