ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் கூட்டம் இன்று காலி, எல்பிட்டிய நகரில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு தொடர்பாக சிந்தித்திருந்தால் எவ்வளவோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்போது அதனை செய்யவில்லை.
இன்று அவர் தேர்தல் தோல்விக்கு அஞ்சி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார். மக்கள் பெரும்பான்மை தமக்கு இல்லை என்பதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நன்கு அறிவார்.
ரணிலும் சஜித்தும் இன்று வெவ்வேறாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இருவரும் தனித்து போட்டியிடுவதனால் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றிபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிவார்கள். எனவே தற்போது ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
ஒன்றிணைவது தொடர்பாக ரணிலும் சஜித்தும் இதுவரை கலந்துரையாடவில்லை. ஆனால் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் அது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நாட்டு மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது.
நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே நாம் மக்கள் ஆணையை கோருகின்றோம். நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்காதவர்களுக்கு மக்கள் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.