“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இயலும் ஸ்ரீலங்கா வெற்றிபேரணி பெல்மடுல்லை நகரில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அரச சேவையாளர்களின் கொடுப்பனவை அதிகரித்தோம். நான் வாக்குறுதிகளை வழங்கி செல்பவர் அல்ல. நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்.

 

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கினேன் இன்று அதனை நான் நிறைவேற்றியுள்ளேன்.எனவே அநுரவும் சஜித்தும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து அரச பணியாளர்களின் சம்பள விவகாரத்தினை நீக்கிக்கொள்ள வேண்டும்.

 

நான் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது கட்டம் கட்டமாகவே என்னுடன் பலர் இணைந்தனர்.வாழ்க்கை சுமை அதிகரிப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

 

பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து நாடு முழு வங்குரோத்து அடைந்தது. இன்று நாம் அந்த நிலையை மாற்றி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பியுள்ளோம்.அரச சேவையாளர்களின் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தினையும் இன்று நாம் அதிகரித்துள்ளோம்.

 

தேசிய உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த முடியும். உரிய பொருளாதார திட்டம் ஒன்றின் அடிப்படையில் பயணிக்கும் போது நாடு முன்னேறும்

நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5 முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளேன்.

 

வாழ்க்கை செலவினை குறைத்தல் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் சம்பளத்தினை அதிகரித்தல் வரிச்சுமையைக் குறைத்தல் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தினை ஊக்குவித்தல் ஆகியனவாகும்.

 

நாம் பணம் அச்சிடவில்லை.ரூபாவின் பெறுமதியை அதிகரித்ததனாலேயே வாழ்க்கையை சுமையை இந்தளவேனும் குறைக்க முடிந்தது. இது வெறும் ஆரம்பம் மாத்திரமே. நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல திட்டங்களை வகுத்துள்ளோம்.

 

வரியினை குறைத்து செலவினை அதிகரித்தமையினாலேயே அன்று கோட்டாபய ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சஜித்தும் அநுரவும் வரியினை குறைப்பதாகவே கூறுகின்றனர்.

 

இதனூடாகவே மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் நான் போலி வாக்குறுதிகளை வழங்கி இந்த நாட்டை பொறுப்பேற்க விரும்பவில்லை. அடுத்த வருடம் நாம் ஒரு லட்சம் வேலைவாய்பபுக்களை உருவாக்குவோம். நாட்டிற்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்த நாடு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடையும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *