அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, 54 வயதான ஹண்டர் பைடன் 2016 – 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளாதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி டிசம்பர் 16 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க ஹண்டர் பைடன் தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018 ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவரை குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஒருவன் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.