காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி !

காசாவின்முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில் காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து காசா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர்  கருத்து தெரிவிக்கையில், “காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது அத்தோடு காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக எங்கள் குழுவினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.

20 முதல் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன இந்த போரின் மிக கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு, கான் யூனிசில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *