நாம் ஆட்சியமைத்தால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் எமது அரசாங்கம் கவிழாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
“முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொன்னார்கள். எங்கள் அரசாங்கம் ஆறு மாதங்கள் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நாங்கள் வெற்றியை நோக்கி இவ்வளவு தூரம் வந்தது ஆறு மாதங்களில் ஒரு அரசாங்கத்தை கைவிட அல்ல ” என்று நேற்று(11) குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க கூறினார்.
அத்துடன் தனது தலைமையில் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிப் பத்து நாட்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான செய்திகள் அலை வீசும் என திஸாநாயக்க தெரிவித்தார்.
இருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். எமக்கு எதிரான பாரிய சதித்திட்டம் தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.