நமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திஸாநாயக்கா இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது. மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டு மக்கள் எவ்வளவு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். வறுமையிலிருந்து மக்களை முதலில் விடுபட செய்வதே எமது பிரதான கொள்கையாகும்.
ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, மக்களும் சுகபோகமாக வாழ வேண்டும். எம்மைப் போன்ற வறுமையான நாடுகள், முன்னேற வேண்டுமெனில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும். இன்று எமது கல்வி முறைமையானது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாரமாக மாறியுள்ளது.
ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் நடந்தே பாடசாலைக்கு சென்று விட முடியும். ஆனால் இங்கோ பேருந்துகளிலோ வேனிலோ நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், 3 கிலோ மீற்றருக்குள் சிறந்த பாடசாலையை மாணவர்களுக்காக நிறுவுவோம்.
நகரத்திற்கு ஒரு வகையான கல்வியும் கிராமத்திற்கு ஒரு வகையான கல்வியும் கற்பிக்கப்படும் கட்டமைப்பை மாற்றி, அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்போம். 2030 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஐ.டி. பொறியியலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.