ஜனாதிபதி தேர்தல் அன்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.