தங்காலை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்ததையடுத்து தங்காலைப் பிரதேசத்திலுள்ள எட்டு பாடசாலைகள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருப்பதாக தங்காலை வலயக் கல்விக் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் தொடர்பாக இப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாகவே இப் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தங்காலைப் பிரதேசத்திற்கு இரு மருத்துவ நிபுணர்கள் அடங்கலான விசேட குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்த்தன கூறினார்.
இவ் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று 28 ஆம் திகதி வரையும் டெங்கு காய்ச்சலுக்கு 3591 பேர் உள்ளாகினர். இவர்களில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக நோயியல் தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணரொருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு, கண்டி, கேகாலை, மட்டக்களப்பு, கம்பஹா, குருணாகல், மாத்தறை, அனுராதபுரம் உட்பட பல பிரதேசங்களில் இக் காய்ச்சலுக்குப் பலர் உள்ளாகியுள்ளதகவும் அவர் கூறினார்.
தங்காலை நிலைமை தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் சுனில் மேலும் குறிப் பிடுகையில்; டெங்கு காய்ச்சல் காரணமாக தங்காலை மகளிர் கல்லூரி 6 ஆம் வகுப்பு மாணவியொருவரும், தங்காலை முன் மாதிரி பாடசாலை முதலாம் தர மாணவரொருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக இப் பிரதேசத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்தே எமது வலயத்திற் குட்பட்ட 8 பாடசாலைகளை மறு அறிவித்தல் வரையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை மகளிர் கல்லூரி, தங்காலை ராகுல கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்மாதிரி பாடசாலை, தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசிய பாடசாலை, தங்காலை ஆரம்ப பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றார்.