அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வொஷிங்டன் நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்ம் போட்டியிடுகின்றனர்.
தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
இந்நிலையில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள்.
கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம். ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் கமலா யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான்” என்றார்.
மேலும், அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.
சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் ட்ரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.