பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரங்களை பரப்பி அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி – ஊவா முதலமைச்சர்

ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை. ஒரு சிலர் உண்மைக்கு புறம்பான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். இவ்வாறு ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் காமினி விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியும் அதேபோல் கல்வியமைச்சராக பதவியேற்ற பொழுது பதுளை, மொனராகலை மாவட்டத்தில் இயங்கிவந்த மூவின பாடசாலைகளில் மலசலகூடம், கட்டிட வசதிகள் என்பன அதிகமாக இருக்கவில்லை. படிப்படியாக மேற்கொண்ட கல்வி மேம்பாட்டுத் திட்டத்தால் சகல வழிகளிலும் பாடசாலைகள் அபிவிருத்தியடைந்து வந்துள்ளதுடன், கல்வியின் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் கிராம தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டிவந்தனர். தற்பொழுது அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. காரணம் கிராம தோட்டப்பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்து கிராம தோட்டப்பாடசாலைகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிராம தோட்டப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவந்தன. ஆசிரியர்கள் அதிகமாக இருக்கும் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. இதையெல்லாம் சரிசெய்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். மாகாணசபைக்குட்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையில் ஒரு போதும் அரசியல் இலாபம் தேடமுனையவில்லை. சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஊவா மாகாண சபையால் 5 ஆயிரத்து 600 தொண்டர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை தீரவில்லை. 40 சித்திரப்பாட ஆசிரியர்களும் விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர். இவ் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. இருக்கும் ஆசிரியர்களிலிருந்து தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்வில் ஊவா மாகாணத்திற்கு மூவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.

பட்டதாரிகளுக்கு வெறுமனமே ஆசிரியர் நியமனம் வழங்க முடியாது. அவர்களுக்கு முதலில் பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி இல்லாமல் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஒரு சிலர் கூறுவது போல் ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடவில்லை.

வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதைவிட கட்சியின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவன் என்ற ரீதியில் ஜனநாயக ரீதியான தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். ஒரு போதும் நிராகரிக்கமாட்டேன்.

தற்போது மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சுயவிபரக்கோவையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விபரக்கோவைகளும் கிடைக்கப்பட்ட பின்னர் அதற்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்படுவதுடன், கல்வியில் பாரிய மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியுமெனக் கருதுகிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *