ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் மாயம் – ஆரம்பித்தது விசாரணை!

சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

 

இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

 

காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

 

மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *