அரச நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய நிறுவன ரீதியான குழுக்களை நியமிக்கப் போவதில்லை. அதற்கான ஒழுங்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார்.

 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று (27) காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் செலவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இருந்த போதிலும் அதன் மூலமான முன்னேற்றம் குறித்து முறையான கணக்காய்வு அவசியமென்றும், கூடிய விரைவில் உள்ளக கணக்காய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் என்ற முறையில் எனது பொறுப்பிலுள்ள அனைத்து அமைச்சுகளிலும் இதுவரை நடக்க வேண்டிய மற்றும் முன்னெடுக்கப்படாத முன்னுரிமைகளை அடையாளம் கண்டு வருகிறேன். குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் பல விஷேட விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரச நிதி வீண் விரயம் மற்றும் துஷ்பிரயோகம் குறித்து ஒரு அரசாங்கமென்ற வகையில் நாம் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோன்று செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதன் காரணமாக விழாக்கள், கொண்டாட்டங்களுக்காக செய்யும் வீண் விரயம் குறைக்கப்பட வேண்டும். அரசாங்கத்திடமிருந்து பெற்ற நிதி மற்றும் செலவழிக்கப்பட்ட தொகைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அமைச்சிடம் உள்ளன. ஆனால் அந்த நிதி மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இதுவரை எந்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை. செலவு செய்யப்பட்ட பணத்தில் என்ன நடந்தது என்பதை உள்ளக கணக்காய்வின் ஊடாக கண்டறியுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது மற்றுமொரு முக்கிய விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. விளையாட்டுத்துறை நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தில் நிகழும் முறைகேடு மற்றும் துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சிடம் குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை. இதன் காரணமாக துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தேன் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *