இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைக்காக மூன்று வருடங்களில் பல கோடி ரூபாய்கள் – அம்பலப்படுத்தப்பட்ட பகீர் தகவல்கள்!

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இவர்களின் பராமரிப்புக்காக கடந்த 2022ம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய். 2023-ம் ஆண்டு எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாக அந்த தொகை வளர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 45 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பேராசிரியர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இவ்வருடம் ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு தலா இரண்டு கோடியே தொண்ணூற்றொரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை ஒதுக்கியதாக கூறும் பேராசிரியர், இந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 273 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகக் கூறும் அத்துகோரள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஐம்பத்து நான்கு வீதமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது 329 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கு ஒதுக்கப்பட்ட பணமானது 101 வீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 660 கோடி ரூபாவாகும்.

2022 ஆம் ஆண்டில், செலவு 273 கோடியாக பதிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 660 கோடியாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் 142 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *