1000ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் இராணுவத்திடம் சரணடைந்தனர் – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

 

சிறுவர் தின நாளில் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவித்தமை குறித்து கண்டனம் தெரிவித்து இன்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

“எட்டுமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடமாக போராடிக்கொண்டு வருகின்றோம்.

 

இங்கு மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கை அரசிடம் பலவழிகளில் பலமுறை நீதி கேட்டு நின்றோம். நீதி கிடைக்காத நிலையில் தான் நாம் எட்டு மாவட்ட உறவுகளும் சரவதேச நீதியைதேடி 2018ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேச நீதி கோரி ஜெனிவா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்று வருகின்றோம்.

 

எமது போராட்டங்களான மே18 இனவழிப்புநாள், சர்வதேச மனித உரிமைகள் தினம், சிறிலங்கா சுதந்திரதினம், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச மகளிர்தினம், சர்வதேச சிறுவர் தினம் அத்துடன் மாதாந்த மாவட்ட ரீதியான கவனயீர்ப்பு போராட்டம் என அத் தினங்களில் நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம்.

 

எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளுக்கும் தலைமைகளுக்கும் சிறிலங்கா காவல்துறை விசாரணை, புலனாய்வுத்துறை விசாரணை என பல ஏராளமான மன உளைச்சல்கள், எண்ணிலடங்காத அச்சுறுத்தல்கள் இவற்றுக்கு மத்தியிலும் நாம் எப்போதும் எமக்கான நீதிக்கான போராட்டத்தை கை விடப்போவதில்லை என உறுதி எடுத்துக்கொள்கின்றோம் .

 

இதேபோல் சிறுவர் தினமான 01/10/2024 அன்று எட்டு மாட்டமும் மாவட்ட ரீதியாக சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு சர்வதேச நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கோண்டோம்.

 

எட்டு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் பட்டியலில்1000ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் இராணுவத்திடம் சரணடைந்தனர் அந்த குழந்தைகளூக்கு என்ன நடந்தது என மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கிறோம்.

“இந்த குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கிய விடயத்தில் உலகளாவிய ரீதியில் சிறிலங்கா முதலாம் இடத்தைப் பெற்று நிற்கிறது. அதேபோல் எட்டு மாவட்டத்திலும் சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக அந்த அந்த மாவட்ட மக்களும் சிறுவர்கள், குழந்தைகள் அனுஷ்டித்தனர்.

 

வவுனியா மாவட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி எஸ்.ஜெனித்தாவின் தலைமையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்துக்கு மூன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்க்கொண்டனா்.

 

போராட்டம் காலை10.30 ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த வேளை போராட்ட இடத்திற்கு வந்த ஒரு நபர் தான் அநுரவின் ஆள் எனவும் இங்கு போராட்டம் செய்யவேண்டாம் என எச்சரித்தார்.

 

அதற்கு தாய்மார் இது ஜனநாயக போராட்டம் நாம் இதை ஏன் நிறுத்த வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அந்த நபர் மிக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவருடைய தொனியில் கத்தினார். யாரோ எமது போராட்டத்தை குழப்புவதற்கு அவரை அனுப்பியதாக எமக்கு தெரிந்தது.

 

தாய்மார் இதையெல்லாம் கதைக்க நீர் யார் என்று கேட்ட போது, குறித்த நபர் நான் அநுரவுடன் ஒன்றரை வருடமாக இருக்கின்றேன். அவர் இப்பொழுது ஜனாதிபதியாக வந்துவிட்டார் அதனால் உங்களை போராட்டம் செய்ய விடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறினாா்.

 

அதுமட்டுமல்ல உங்களை எல்லாம் கைது செய்யப்போகிறேன் என்று தகாத வார்த்தைகளால் அவ்விடத்தில் பேசி எமது தாய்மாரின் மனதை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்.

 

ஆனால் எமக்கு இவர் ஜனாதிபதி அநுரவின் ஆளோ அல்லது காவல்துறையினரின் ஆளோ அல்லது புலனாய்வுத்துறையின் ஆளோ அல்லது வேறுயாருடைய ஆளோ என்று எமக்கு தெரியாது.

 

இங்கு குழப்பத்தை ஏற்படுத்தியவருக்கும் அவரை இயக்குபவருக்கும் நாம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எமது போராட்டத்தை குழப்ப வரும் எவரானாலும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

நாம் உறவுகளை உயிருடன் ஒப்படைத்துவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த போராட்டத்தில் எம்முடன் இருந்து உறவைத தேடிய 280ற்கும் மேற்பட்ட உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இதற்கு யாருமே பதில் சொல்ல முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஆகவே எமது போராட்டம் எமக்கு சரியான சர்வதேச நீதி கிடைக்கும் வரை தொடரும் என பிரகடனப்படுத்துகின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *