வட மராட்சியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த என்.சிவநாதன் (சிவம்) திங்கட்கிழமை கனடாவின் ரொறன்டோவில் காலமானார். அவருக்கு வயது 58. நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவநாதன் 1970 களில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் சார்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பல போராட்டங்களில் பங்கேற்றவர்.
1983 ஜூலை இன வன்செயலுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட நிலைவரங்கள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர்ந்த சிவநாதன் கனடாவிலும் இடதுசாரி இயக்கத்தின் பணிகளிலும் முற்போக்கு காலை இலக்கிய பணிகளிலும் துடிப்புடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வேளையில் திங்களன்று மாரடைப்பால் காலமானதாக கனடாவில் உள்ள அவரின் நண்பர்கள் அறிவித்துள்ளனர். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான அவரின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறும்.