வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றன என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர்.
இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது.
காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர்.
அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகள் அவ்வாறுள்ளன.
ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.
ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.
அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன. எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது.
கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.
குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.