உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. “- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவித்துவமான மொழி நடையில் வரலாற்றுடன் தொடர்புப்படுத்தி எழுதியமைக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த முதல் பெண் எழுத்தாளர் நோபல் பரிசு பெறுவதால், அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தனது பேஸ்புக் பக்கத்தில், “நமது நவீன வரலாற்றின் வலிமிகுந்த காயங்களைக் கடந்து ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை உருவாக்கியுள்ளது. இது கொரிய இலக்கிய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேசிய கொண்டாட்டத்திற்கான காரணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

”ஹான் காங் ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவார். இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு அவர் மிகவும் தகுதியானவர்” என பச்சிங்கோவின் கொரிய-அமெரிக்க எழுத்தாளர் மின் ஜின் லீயும், “ஒரு கொரிய நாவலாசிரியர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்றால், அது ஹான் காங்காக இருக்க வேண்டும்” என்று தென்கொரிய எழுத்தாளர் சுங்-இல் கிம்மும் “கொரியாவின் கடந்தகால வரலாற்றை மறைக்கவும் சிதைக்கவும் முயற்சிக்கும் முட்டாள்தனத்தை இந்தப் பரிசு வென்றுள்ளது” தென் கொரிய எழுத்தாளர் கிம் போ-யங்கும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தென் கொரிய எழுத்தாளரான ஹான் காங், இதுகுறித்த சந்தோஷத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர், தனது தந்தையிடம் சில கருத்துகளைக் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதன்படி ஹான் காங்கின் தந்தையும் எழுத்தாளருமான ஹான் சியுங்-வோன், “ ‘போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் அல்லது செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?’ என என் மகள் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

உக்ரைன் மற்றும் காஸாவில் நடைபெற்று வரும் போர், தன் மகளைத் தொந்தரவு செய்துள்ளது. ’உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் தொலைவில் இருந்தாலும் அதற்கான நமது பொறுப்புகளை நாம் கைவிட முடியாது’ என தன் மகள் தன்னிடம் தெரிவித்தார்.

 

வெகுஜன மனிதர்கள், துயரத்தில் இருக்கும்போது ஓர் எழுத்தாளராக தனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதாக அவள் உணர்கிறாள். ஆரம்பத்தில் இதைக் கொண்டாடுவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் ஒரே இரவில் தன் மனதை மாற்றிக் கொண்டார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *