உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர் தரப்பினர் கூறுவதை போல விசாரணை அறிக்கையை நினைத்தப்படி வெளியிடுவதற்கு இது ஒன்றும் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல எனவும் விஜித ஹேரத் சாடியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.
அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் ஏன் தயங்குகின்றது என்பதை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய விஜித ஹேரத்,
ஒவ்வொரு தனிநபர் கோரிக்கையின் அடிப்படையில் அவற்றை வெளியிட முடியாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், தங்கள் பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக உள்ளோம்.
கம்பன்பில கூறுவதை போல அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.