மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்ற நிலை உருவாக்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (19) காலை ஜிர்பும் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்தி சமூகங்கள் இடையே பெரும் கலவரம் மூண்டது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பின்னர் அங்கு நிலைமை ஓரளவு சீராகி வந்த நிலையில், செப்டெம்பர் 1 ஆம் திகதி மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் இருவர் உயிரிழந்தனர்.
பின்னர் செப்டெம்பர் 7 ஆம் திகதி ஜிரிபம் பகுதியில் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முழுவதுமே மணிப்பூரில் பதற்ற சூழ்நிலை இருந்து வந்தது.
இணையசேவை தடை, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓராண்டை கடந்தும் இந்த வன்முறைகள் நீண்டு கொண்டே செல்கிறது.
ஒக்டோபர் மாத தொடக்கத்தில் பதற்றம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.
தாக்குதலை அறிந்த பாதுகாப்பு படையினர் பதிலடியாக, அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.
இருதரப்புக்கும் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. சண்டையில் எந்த தரப்புக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.