கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் உரிய அறிக்கைகளை வழங்கியிருந்ததுடன், பத்தரமுல்லை சீலரதன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகியோர் வருமான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
இதன்படி, மூன்று வேட்பாளர்கள் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் ஊடாக பொலிஸாரின் தலையீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.