பதினொரு மாநிலங்களில் உள்ள 107 தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத்தில் 26 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 16, உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்காளத்தில் 14, பிகாரில் 11, கர்நாடகத்தில் 11, மகாராஷ்டிரத்தில் 10, காஷ்மீர், சிக்கிம், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 107 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
இந்தத் தேர்தல் 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 1,65,112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
நக்சலைட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிகார், மேற்கு வங்கத் தொகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர். இன்று தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாஜக தலைவர் அத்வானி போட்டியிடும் காந்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடக்கம்.
அதேபோல முன்னாள் பிரதமர் தேவ கெளடா போட்டியிடும் ஹாசன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போட்டியிடும் மாதேபுரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா போட்டியிடும் ஷிமோகா ஆகிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்தது. மும்பையின் அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது.
இன்றைய வாக்குப் பதிவுடன் நாட்டில் மொத்தமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 171 தொகுதிகளில் 4-வது கட்டமாக வரும் மே 7ம் தேதி 85 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. 5வது கட்டமாக 13ம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 86 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.