தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, இந்திய மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளை மேற்கொள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்திய மீனவர்கள் இலங்கையின் நெடுந்தீவுக்கு தீவுக்கு அருகில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு இதுவரை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தின் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 450 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 61 மீன்பிடி இழுவை படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.