இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். – தீபாவளி வாழ்த்தில் ஜனாதிபதி அனுர குமார!

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞ்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் (31.10.2024) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலகவாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமணர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன்.

கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம்.

பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.

அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்.

 

அவ்வாறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும்.

 

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கின் ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *