17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையான “மக்கள் ஆணையை” புரிந்து கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் கூட்டமொன்றில் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ரணிலிடம் நான் ஒருபோதும் அறிவுறை பெற மாட்டேன், 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டவர், விடாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அரசியலமைப்பை கற்பிக்க முடியும் என்று ரணில் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை. அரசியலமைப்பின் அடிப்படையானது மக்களின் ஆணையாகும். இதையும் புரிந்து கொள்ளத் தவறிய ரணிலுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றித் தெரியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
முடிவுகளை எடுக்கும்போது சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அத்தகைய நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்றும் நான் கூறியிருந்தேன்.
மக்களின் கருத்துக்களை கேட்டு, அதிகாரிகளின் கருத்துக்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறோம்.அவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று நாமும் நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.
மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தது அமைப்பை மாற்றுவதற்காகவே தவிர, அவர்களிடமிருந்து பாடம் கற்று அதையே செய்ய அல்ல.அப்படிச் செய்தால் நாளை எங்களை வெளியேற்றுவீர்கள்.
நாங்கள் ரணிலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அல்ல. நாங்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.
அண்மையில் அரசியலமைப்பு குறித்து பிரதமர் ஹரிணி கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என ரணில் தெரிவித்திருந்தமையை அடுத்து பிரதமர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.