தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயம் நீக்கப்படும் என்று அந்த்க கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாது என்று தொடர்ச்சியாகச் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் ஒரு பதற்றநிலையை ஏற்படுத்துவதுடன், எமக்கு எதிராக அவதூறையும் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் இவ்வாறான கருத்துக்களை போலியாகவும், திரிவுபடுத்தியும் கூறி வருகின்றார். இது ஆரோக்கியமானது அல்ல. நாம் ஆட்சிக்கு வந்தால் (தேசிய மக்கள் சக்தி) பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். இந்தச் சட்டத்தின் கொடுமையை, இந்தச் சட்டம் தரும் வலியை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆதலால், அதை நிச்சயம் நீக்கியே தீருவோம்.
இது எமது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன், மாகாணசபைத் தேர்தல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நடத்தப்படாது என்றும், மாகாணசபைத் தேர்தல்களை தேசிய மக்கள் இல்லாமல் செய்யும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
உண்மையில் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் திரிவுபடுத்தப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும். முடியுமான விரைவில் நாம் அவற்றை நடத்துவோம். அத்துடன், தமிழ் அதிகாரிகளின் நியமனங்களை நாம் மேற்கொள்வோம். தமிழர்கள் தமது தேவைகளுக்கு கொழும்புக்கு ஓடிச்செல்லாமல், யாழ்ப்பாணத்தில் தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.- என்றார்.