தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் – சசிகலா ரவிராஜ்

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

யாழ் . ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்,

தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளின் கூட்டில் தான் நான் இணைந்துள்ளேன். எனது கணவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேளையே படுகொலை செய்யப்பட்டார்.

 

கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி சார்ப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் போட்டியிட்டேன். அதன் அடிப்படையில் இந்த முறை தேர்தலிலும் தமிழரசு கட்சி ஆசனம் வழங்கும் என எதிர்பார்த்து இருந்தேன். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

 

பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நான் தோற்று போனவளாக இந்த தேர்தலில் இருந்து விலகி இருக்க விரும்பவில்லை. அப்போது தான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டேன்.

 

பெண்களுக்காக உங்கள் முன் நிற்கும் என்னை தெரிவு செய்ய வேண்டும். பெண்கள் மிக ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 

இந்த தேர்தலில் பல கட்சிகள் பல சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது . அதில் ஐந்து கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

 

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு கரங்களையும் நீட்டி தயாராகவே இருக்கிறது.

 

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 

எனவே ஒற்றுமையாக இருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் எனவும் , எனது கணவரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன் எனவே சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதில் எனது இலக்கமான 07ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்கினை அழிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *